இசை அனுபவத்தை நேரில் கேட்க வேண்டும் – தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா
இளையராஜா லண்டனில் நிகழ்த்திய சிம்பொனி இசைக்காக தமிழக அரசு மரியாதை அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். தனது இசையை நேரில் அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வயது ஒரு தடையல்ல, தொடர்ந்து செயல்படுவேன் என உறுதிபடக் கூறினார்.

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனி இசையை வெற்றிகரமாக அரங்கேற்றினார். இன்று காலை அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசு எனக்கு வழங்கிய மரியாதை என் மனதை நெகிழ்விக்கிறது. முதல்வர் வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக மக்கள் தொடர்ந்து என்னை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன்" எனக் கூறினார்.
தன் சமீபத்திய சிம்பொனி இசை வெளியீடு குறித்து கருத்து தெரிவிக்கும் போது, "இந்த இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது. இது நேரடியாக அனுபவிக்க வேண்டிய இசை. அனைவரும் அதைப் பதிவு செய்யாமல் நேரில் வந்து கேட்பதை விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.
தனது பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட அவர், "நான் இன்னும் சாதாரண மனிதனை போலவே உழைத்துக்கொண்டிருக்கிறேன். எனது வயது 82 ஆகிவிட்டது. இனிமேல் இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்று யாரும் எண்ணத் தேவையில்லை. உங்கள் எண்ணங்களை விட நான் அதிகம் செயல்படுவேன்" என தெரிவித்தார்.
What's Your Reaction?






